Sunday, March 9, 2008

அழிவின் விளிம்பில் (செ.முத்துக்குமாரசாமி)

புவி வெப்பமடைவதால் பல விளைவுகள் உருவாகின்றன. திடீர் புயல், திடீர் மழை, பெருவெள்ளம் மற்றும் குறிப்பாக வெப்பநிலை உயர்வு மற்றும் பனி உருகுதல் போன்றவை வழக்கத்தைவிட அதிகரித்து வருகின்றன.

அண்டார்டிகா கண்டத்தில் உள்ள 300 பனி ஆறுகள் 1993இல் உருகியதைவிட 2003இல் 12 சதம் அதிகமாக உருகியுள்ளது.

இதனால், கடல்களில் நீர்மட்டம் கடுமையாக உயரும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு உயருமானால் மாலத்தீவு, லட்சத்தீவு, அந்தமான் போன்றவை முற்றிலும் அழிவதோடு மட்டுமல்லாமல் நமது கடலோரப் பகுதிகளும் மூழ்கும் அபாயம் உள்ளது.

கண்முன்னே அவல சாட்சியாய் நியூ கினியாவிலுள்ள 6 சிறு தீவுகளில் வாழும் 980 நபர்கள் வேறு இடத்திற்கு பெயர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். பசிபிக் பெருங்கடலோடு கடந்த 30 ஆண்டுகளாக அவர்கள் நடத்தி வந்த போராட்டம் தோல்வியுற்றது. கடலின் உயரம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு அங்குலத்துக்கும் சற்று கூடுதலாக அதிகரித்துவருகிறது. இதனால், இவர்கள் வாழும் தீவுகள் கடல் மட்டத்தை நெருங்கி வருகின்றன.

2005 நவம்பர் 24ஆம் தேதி இத்தீவுகளில் உள்ள மக்களை வெளியேற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் இவர்களை மீட்டெடுக்க பாப்புவா நியூகினியா அரசிடம் நிதி இல்லை என்று காரணம் சொல்லப்பட்டது. தற்போது குடும்பம் குடும்பமாக இங்குள்ள மக்கள் 99 கி.மீ. தூரத்தில் உள்ள ‘பொகைன்வில்லே’ தீவுக்கு மாற்றப்படுவார்கள். வரும் இரண்டு ஆண்டுகளில் ஆறு தீவுகளும் ஆளற்ற தீவுகளாக மாறிவிடும். 2015க்குள் இவை கடலில் மூழ்கிவிடும்.

இவை மட்டுமல்ல, இன்னும் பல தீவுகள் கடலுக்கு இரையாகி வருகின்றன. பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாடி, மார்ஷல்ஸ் மற்றும் பல தீவுகளை அடியில் கண்ணாடி பொருத்தப்பட்ட படகுகளின் மூலமாகத்தான் பார்க்க வேண்டும். கொலம்பியாவிற்கு அருகே உள்ள ‘சியார்ரா நெவேடா’வில் பனிமலைகள் வறண்டு போய் உள்ளது. தெற்குப் பசிபிக் கடலில் பஜீக்கு வடக்கே உள்ள துவாலு என்ற சின்னஞ்சிறு நாட்டின் பல்வேறு பகுதிகளை கடல் விழுங்கிவிட்டது.

விவசாய நிலம் அனைத்தும் பாறைகளால் மூடப்பட்டுவிட்டது. இதுபோலவே வடக்கு பாகிஸ்தானில் உள்ள ஹிந்துகுஷ்மலை, அமெரிக்காவின் வடகோடி அலாஸ்கா நகரமான பாரோ, கிரீன்லாந்தில் உள்ள மிகப்பெரும் பனி அடுக்குகள் ஆகியவை மிகப்பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

இந்தியாவில் கங்கை உருவாகும் பகுதியான கௌமுக்ல் பனிப்பாறைகள் வேகமாக உருகிவருகிறது. சமீபகாலங்களில் ஹிமாலயத்தின் பலபகுதிகளில் பனிப்பொழிவும் குறைந்து வருகிறது. இதன் காரணமாகப் பெரிய நதிகளுக்கு ஆதாரமாக விளங்கும் சிறிய நீருற்றுகளும் வற்றிப்போகிறது; இதனால், இந்தியாவின் 50 கோடி மக்களின் தாகம் தீர்க்கும் கங்கையின் ஜீவன் கேள்விக்குள்ளாகியுள்ளது. புவி வெப்பமடைவதுதான் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

என்ன, ஏன், எப்படி???

பூமி தோன்றிய போது காற்று மண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடும், மீத்தேனும் மட்டுமே இருந்தன. ஆக்சிஜன் இருக்கவில்லை. அதனால், உயிரினங்களும் இல்லை. பின்னர் தாவரங்கள் உருவான பிறகு, தாவரங்களும், மரங்களும் கார்பன்டை ஆக்ஸைடை உள்வாங்கி, ஆக்சிஜனை வெளியிட்டதால் காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் அளவு கூடியது. இதுவே உயிரினங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தது.

கார்பன்டை ஆக்ஸைடை உள்வாங்கி கார்பனை சேமித்த தாவரங்களும், மரங்களும் பூமிக்கடியில் புதைந்து நிலக்கரி, பெட்ரோலியம் இரும்புகளாக மாறின. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் புதைந்து போனதால் இவை பழம் எரிபொருட்கள் என அழைக்கப்படுகின்றன. கடந்த 75 ஆண்டுகளாக மக்கள் மிக அதிகமான அளவிற்கு பெட்ரோல், டீசல், நிலக்கரியைப் பயன்படுத்தி வருவதால் காற்று மண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடும், மீத்தேனும் அதிகமாகச் சேர ஆரம்பித்தன. மேலும், தேவைகளுக்காக காடுகள் படிப்படியாக அழிக்கப்படுவதால் கார்பன்டை ஆக்ஸைடு உள்வாங்ககப்படுவது குறைந்து வருகிறது. இதனால், பூமி வெப்பமடைவது அதிகரிக்கிறது.

மேலும், பூமி வெப்பமடைவதற்கு பசுங்கூட விளைவு காரணம் என சொல்லப்படுகிறது. அதாவது, காற்றுமண்டலத்தை பொறுத்தவரை 78 சதம் நைட்ரஜனும், 21 சதம் ஆக்ஸிஜனும் கொண்டதாகும். இவை இரண்டும் சூரியனிலிருந்து வரும் குறுகிய அலை நீள வெப்பத்தையும், பூமியிலிருந்து வெளியேறும் நீண்ட அலை நீள வெப்பத்தையும் காற்று மண்டலம் வழியாகச் செல்ல அனுமதிக்கிறது. ஆக 99 சதவீதம் காற்றுமண்டலம் இருவகை கதிர்களையும் அனுமதிக்கிறது.

மீதமுள்ள 1 சதவீதமான காற்று மண்டலமானது கார்பன்டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஈரப்பதம் ஆகியவற்றால் ஆனது. இந்த ஒரு சதவீத காற்று மண்டலம் தன்னுள்ளே நீண்ட அலை நீளம் உடையவைகளை அனுமதிப்பதில்லை. குறுகிய அலை நீளம் உள்ளவைகளை மட்டுமே அனுமதிக்கிறது. இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் ‘பசுங்கூட வாயுக்கள்’ என்றும் இவை ஏற்படுத்தும் விளைவு ‘பசுங்கூட விளைவு’ என்றும் கூறுகிறோம்.
இந்த பசுங்கூட விளைவு மிகவும் முக்கியமானது. இது உயிரினம் தோன்றுவதற்கு மிகவும் ஆதாரமானது. ஆனால், ஒரு சதமானமுள்ள பசுங்கூட வாயுக்களின் அளவு உயரும் போது அதிக அளவிலான வெப்பம், காற்று மண்லத்திலிருந்து மீண்டும் பூமிக்கே திரும்பும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு பூமியின் வெப்பம் பூமிக்கே அளவுக்கு

தனிமைப்பட்ட அமெரிக்கா

இந்தோனேசியாவின் பாலிதீவில் உள்ள நூசாதுவாவில் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் துவங்கி 13 நாட்களாக ஐ.நா.சபை சார்பில் உலக காலநிலை மாநாடு நடைபெற்றது. கடந்த பல ஆண்டுகளாகப் புவியின் வெப்பநிலையை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் தொடர்ந்து விடுத்த எச்சரிக்கைகளின் விளைவாகவும், உலகச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கியோட்டோ ஒப்பந்தம் 2012ஆம் ஆண்டில் காலாவதியாக இருப்பதாலும், புதிய உடன்பாட்டை ஏற்படுத்துவதற்கான மாநாடு பாலியில் நடைபெற்றது. உலகிலுள்ள 190 நாடுகள் இதில் கலந்து கொண்டன.

இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தொழிற்சாலைகள், குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் வெளியிடும் நச்சுவாயு உள்ளிட்ட மாசுகளின் அளவை குறைப்பதற்கான உடன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 13 நாட்கள் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் ஐ.நா.சபை முன்வைத்த ஒவ்வொரு அம்சத்தையும் அமெரிக்கா நிராகரித்தது அல்லது ஏற்றுக்கொள்ள மறுத்தது.

உலகிலேயே மிக அதிகமான நச்சுவாயுக்களை வெளியிடும் பெரும் நிறுவனங்கள் அமெரிக்காவில் தான் அதிகம் உள்ளன. ஆனாலும் தனது நாட்டின் பெரும் தொழிற்சாலைகளுக்கு விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளின் தொழில் துறையை சீர்குலைக்கும் நோக்கில், அந்நாடுகளின் தொழிற்சாலைகளுக்குக் கடுமையான விதிகளை வகுக்க வேண்டுமென இம்மாநாட்டில் வாதிட்டது.

ஏற்கனவே கியோட்டோ உடன்பாட்டை செயல்படுத்தாத அமெரிக்கா, புதிதாக உடன்பாடு ஏற்படுவதை கடுமையாக எதிர்த்தது. எனினும் உலகின் 190 நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து, புவி வெப்பமடைவதைத் தடுக்க சர்வதேச விதிமுறைகளை வகுப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாட்டை 2009ஆம் ஆண்டில் முழுமையாக உருவாக்குவது என முடிவு செய்துள்ளன. ஆனாலும், இம்முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி அமெரிக்கா மட்டும் தனிமைப்பட்டே நின்றது.

மாநாட்டில் பேசிய இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் கபில்சிபில், உலக நாடுகளுடன் அமெரிக்காவும் இணைந்து கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், மாநாட்டில் பேசிய பாபுவா நியூகினியா தீவின் சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் பங்கேற்ற டோப்ரியான்ஸ்கி எனும் பெண்மணி .”உலக நாடுகளுடன் ஒத்துப்போக முடியவில்லை என்றால் மாநாட்டை விட்டு அமெரிக்கா வெளியேற வேண்டும்’’ என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டின் இறுதியில் உரையாற்றிய ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான்கிமூன், மனித குலத்தை காப்பாற்றும் பணியில் அமெரிக்காவும் இணைந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். நடைபெற்று முடிந்த இம்மாநாட்டில் உலகின் 190 நாடுகள் ஒருபுறமும், தனிமைப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் மறுபுறமும் நிற்பதை காண முடிந்தது.

ஏகாதிபத்தியம் இந்த யுத்தத்தில் தனிமைப்பட்டிருப்பது போராளிகளுக்கு வல்லமை சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks:Keetru.com

No comments: